

சென்னை: ரயில்வே துறையில் பணியாளர்களை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இந்திய ரயில்வேயில் 2 சதவீதம் (29,608) பணியிடங்களை குறைக்கும் பாஜக அரசின் அராஜகபோக்கு கண்டனத்துக்குரியது. மக்களுக்கான ரயில்வே துறையில் இதுபோன்ற அறிவிப்புகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இதனால், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பணியிடங்கள் பாதிக்கப்படும். ஏற்கெனவே பணியாளர் பற்றாக்குறை நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மீதமுள்ள ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும்.
வந்தே பாரத், அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகம் செய்து வரும் சூழலில், பணியாளர்களை குறைப்பது ரயில் சேவையின் தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும்.
இது ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் முயற்சியாகும். எனவே, இந்த பணியிடக் குறைப்பு முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்திய ரயில்வேயில் 2 சதவீத பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்திருப்பது தொழிலாளர் விரோதபோக்காகும். இந்தியாவில் நாள் தோறும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, பணி குறைப்பு மேற்கொள்வது என்பது சரியல்ல. இந்தியாவின் முதன்மையான பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்.
அதை போக்குவதில் கவனம் செலுத்தாத மத்திய அரசு, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, இளைய தலைமுறையினரின் நலன்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் எதிரானது.
தி.க. தலைவர் கி.வீரமணி: ரயில்வே துறையில் 2 சதவீத பணியிட குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே ஆகும். தனியார் மயமாக்கல் என்பதும், பணியிடக் குறைப்பு என்பதும் சமூகநீதி அடிப்படையில் மிகப்பெரிய ஆபத்தாகும்.
இந்த நடவடிக்கை அனைத்து அரசு துறைகளிலும் இதே போல் ஆட்குறைப்பு செய்வதற்கான தொடக்கமே ஆகும். இதை தொழிற்சங்கங்களும், சமூகநீதி உணர்வாளர்களும் இணைந்து தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று தேர்தல் நேரத்தில் அறிவித்துவிட்டு, இருக்கின்ற வேலைகளை குறைக்கும் பணிகளை முன்னெடுப்பது மத்திய பாஜக அரசின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஏற்கெனவே, பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் ரயில்வேயில் ஆட்குறைப்பு வேலைகளை செய்வதை தவிர்த்து, கூடுதலாக பணியாளர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.