

சென்னை: மே மாதம் முதல் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும் என மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், வீடுகள், அலுவலகங்களில் பெரும்பாலான நேரம் ஏசி இயக்கப்பட்டு வருகிறது.
இந்த கோடை காலத்தில் தேவை அதிகரித்து தென் மாநிலங்களில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவை குறித்த தகவல்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 2025 மற்றும் 2026 மார்ச் மாதங்களை ஒப்பிட்டு இந்த மின் தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டில் இருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களிலேயே மின் தேவையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சராசரியாக தினசரி மின் தேவை 16,000 மெகாவாட்டாக இருக்கும். இது வெயில் காலத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கும்போது இன்னும் அதிகரிக்கும். கடந்த 21-ம் தேதி தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம் தொட்டு 21,060 மெகாவாட்டாக இருந்தது.
இந்த சூழலில், மே மாதம் முதல் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும் என மத்திய மின்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோடையில் மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.