விருதுநகர் மாவட்டத்தில் வலுக்கும் நெசவாளர்கள் போராட்டம் - அரசியல் கட்சிகள் ஆதரவு

விரைந்து தீர்வுகாண வேண்டிய நெருக்கடியில் அதிகாரிகள்
ராஜபாளையம் அருகே புனல்வேலியில் 10-வது நாளாக நேற்று கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.

ராஜபாளையம் அருகே புனல்வேலியில் 10-வது நாளாக நேற்று கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.

Updated on
2 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் கூலி உயர்வை வலியுறுத்தி நெசவாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தீர்வுகாண முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு தலா ஒரு வேஷ்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இலவச சேலை மற்றும் சீருடை துணிகள் விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கைத்தறி, பெடல் தறி, விசைத்தறிகள் மூலம் நெசவு செய்யப்படுகிறது.

2,600-க்கும் மேற்பட்ட கைத்தறிகள், 11 ஆயிரத்துக்கும் அதிகமான பெடல் தறிகள், 42 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் நெசவு செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகவூர், புனல்வேலி, சேத்தூர், சொக்கநாதன்புத்தூர், சுந்தரபாண்டியம், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 29 நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் நெசவு பணிகள் நடைபெறுகின்றன.

இங்கு 8 மாதங்கள் சேலை உற்பத்தியும், 4 மாதங்கள் சீருடை துணியும் (காடா துணி) நெசவு செய்யப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு புதிய ரக சேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான நூல் கடந்த மே மாதம் முதல் வழங்கப்படவில்லை. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதேநேரம், புதிய ரக சேலையை நெசவு செய்ய கூலி உயர்வு தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, புதிய ரக சேலை உற்பத்திக்காக தறிகளில் செய்யப்படும் மாற்றத்துக்கான செலவை அரசு ஏற்க வேண்டும். சேலைக்கு ரூ.250 கூலியாக நிர்ணயிக்க வேண்டும். 5 மாத வேலையிழப்புக்கு மாதம் ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நூல் வாங்காமல் நெசவு பணிகளை புறக்கணித்து கூட்டுறவு சங்க அலுவலக முற்றுகை போராட்டம், சாலை மறியல், கஞ்சித்தொட்டி திறப்பு, யாசகம் கேட்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்களுக்கு ஆதரவாக ராஜபாளையம் அருகே புனல்வேலியில் சிஐடியு சார்பில் 10 நாட்களுக்கு மேலாக கஞ்சித்தொட்டி திறப்பு போரட்டம் நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் செட்டியார்பட்டியில் திமுக சார்பிலும், புனல்வேலியில் நாம் தமிழர் கட்சி சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையிலும், ராஜபாளையத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இன்று (செப். 22) ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நெச வாளர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் அளித்து வரும் ஆதரவு காரணமாக தீர்வு காண வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி கைத்தறித்துறை அமைச்சரை 5 நாட்களில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ஆனாலும், கூலி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிடாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுகுறித்து இலவச சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் கூறுகையில், புதிய ரக சேலை அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு ஏற்ற வகையில் கூலி நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். பெடல் தறியில் பழைய ரக சேலை நெசவு செய்ய 2 மணி நேரம் 30 நிமிடம் ஆகும் நிலையில், புதிய ரக சேலை நெசவு செய்ய கூடுதலாக 1 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த ஆண்டு புதிய ரக வேஷ்டி, சேலை குறித்த அரசாணையில் கூலி குறித்தும், தறிகளில் செய்யப்படும் மாற்றத்துக்கான செலவு குறித்தும் எந்த தகவலும் இல்லை.

கூலி உயர்வு குறித்து கருத்துக்கேட்க அமைக்கப்பட்ட ஐவர் குழுவினர் நெசவாளர்களை சந்திக்காமல், பிரதிநிதிகளை மட்டும் சந்தித்து சென்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.500 வருவாய் கிடைக்கும் வகையில் கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

<div class="paragraphs"><p>ராஜபாளையம் அருகே புனல்வேலியில் 10-வது நாளாக நேற்று கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.</p></div>
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: ரூ.3 லட்சம் மாத ஊதியத்தை வேண்டாம் என மறுத்த ஓய்வு நீதிபதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in