‘கோவில்’ தொகுதிக்காக மகளை தயார்படுத்தும் ‘நாஞ்சில்’ பிரமுகர் | உள்குத்து உளவாளி

‘கோவில்’ தொகுதிக்காக மகளை தயார்படுத்தும் ‘நாஞ்சில்’ பிரமுகர் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தென்கோடியில் இருக்கும் ‘கோவில்’ தொகுதியை இம்முறையும் தங்களுக்காக கேட்கிறதாம் மலர் கட்சி. ஆனால், அப்படி இருந்தும் மாளிகைக் கட்சியின் ‘நாஞ்சில்’ பிரமுகர் தனது மகளை அந்தத் தொகுதிக்காக பக்காவாக தயார்படுத்துகிறாராம். ‘அம்மா’ காலத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்த ‘நாஞ்சில்’ பிரமுகரை சொந்தக் கட்சியின் ‘சுந்தரமான’வரே ’வில்லங்க’ வழக்கில் சிக்க வைத்ததாகச் சொல்வார்கள்.

அந்த வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டாலும் மக்கள் மத்தியில் மீண்டும் போய் கைகூப்பி நிற்பதற்குக் கூச்சப்படும் ‘நாஞ்சிலார்’, தற்போது கவுன்சிலராக இருக்கும் தனது மகளை தனக்குப் பதிலாக ’கோவில்’ தொகுதியில் நிறுத்தும் திட்டத்துடன் பணத்தை வாரி இறைக்கிறாராம். இதே தொகுதிக்கு சூரியக் கட்சி தரப்பில், மாநகரத்தின் ‘வணக்கத்துக்குரியவர்’ கடுமையாக போராடுகிறார்.

இவருக்குப் போட்டியாக, மகளிரணிப் புள்ளியும் கட்சியின் பெண்வாரிசு சிபாரிசில் களத்தைப் பிடிக்க காய்நகர்த்துகிறார். இதில், ‘வணக்கத்துக் குரியவரும்’ நாஞ்சிலாரும் உறவுக்காரர்கள். “தொகுதியை, எங்களுக்குக் கொடுப்பதைவிட இலைக் கட்சிக்கு கொடுத்தால் ’நாஞ்சிலார்’ நிச்சயம் மகளை நிறுத்தி சூரியக் கட்சிக்கு டஃப் ஃபைட் கொடுப்பார்” என்று மலர் கட்சிக்காரர்களே மறைக்காமல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தளவுக்கு அனைத்துத் தரப்பினரையும் தனது அணுகுமுறையால் ஈர்த்து வருகிறார் ‘நாஞ்சிலாரின்’ நல்ல மகள்.

‘கோவில்’ தொகுதிக்காக மகளை தயார்படுத்தும் ‘நாஞ்சில்’ பிரமுகர் | உள்குத்து உளவாளி
புது ‘கழகக்’ கட்சி தலைவரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in