‘குறிச்சி’ தொகுதியும், வாகைக் கட்சி நகர்வுகளும் | உள்குத்து உளவாளி

‘குறிச்சி’ தொகுதியும், வாகைக் கட்சி நகர்வுகளும் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

குடைச்சல் தரும் குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக ‘குறிச்சி’ தொகுதியின் வாகை எம்எல்ஏ-வை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க பலவிதமாக ஆலோசனைகள் நடக்கிறதாம். ஆட்சியை நிம்மதியுடன் நகர்த்திச் செல்வதற்கு சொந்தக் கட்சி எம்எல்ஏ-க்களின் பலம் கூடுதலாகத் தேவைப்படும் நிலையில், உடனடியாக ராஜினாமா செய்யத் தேவையில்லை. விசாரணை முடிவுகளைப் பொறுத்து முடிவெடுக்கலாம் என்று கட்சிக்குள் ஒரு தரப்பில் யோசனை சொன்னார்களாம். ஆனால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்காக இருந்தால் அப்படி முடிவெடுக்கலாம்.

இந்த விவகாரத்தில் அப்படி முடிவெடுக்க முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் அட்வைஸ் தந்தார்களாம். இனியும் எம்எல்ஏ-வை பதவியில் நீடிக்க வைத்தால் நீதிமன்றத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். மக்கள் மன்றத்திலும் ‘வாழ்த்துகளை’ வாங்க வேண்டி இருக்கும் என்று சட்டப்புள்ளிகள் தரப்பில் எடுத்துக் கொடுத்தார் களாம். இதனால், இன்று அல்லது நாளைக்குள் குறுஞ்செய்தி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்கிறார்கள்.

இந்த நிலையில், திண்ணைக்காக காத்திருந்த கதையாக இப்போதே சீற்றக் கட்சிக்குள் ‘குறிச்சி’ தொகுதிக்காக குதிக்கிறார்களாம். பொதுத் தேர்தலில் சூரியக் கூட்டணியில் இங்கே சீறும் கட்சி தலைவரின் மருமகள் போட்டியிட்டார். இவருக்காக சூரியக் கட்சி தரப்பில் இருந்தும் உழைப்பைக் ‘கொட்டிச்’ செலவழித்தார்கள். அப்படி இருந்தும் சீறும் கட்சி தலைவரால் மருமகளை கரை சேர்க்க முடியாமல் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், இப்போது வாகைக் கூட்டணிக்குள் வந்துவிட்ட சீற்றக் கட்சி, கடந்த முறை தாங்கள் போட்டியிட்ட தொகுதி என்பதால் இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேச்சை விட ஆரம்பித்திருக்கிறதாம். ஒருவேளை, தொகுதி இவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் தலைவரின் மருமகளே இங்கு களமிறங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, எம்எல்ஏ ராஜினாமாவுக்குப் பிறகு ஆட்சியரை அரியலூர் அல்லது பெரம்பலூருக்கு மாற்றுவது, அல்லது சிப்காட் மாதிரியான இடங்களில் பணியமர்த்துவது என்ற இரட்டை யோசனையிலும் இருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.

X