எங்கு சுற்றியும் இங்குதான் வந்து நிற்கும் இந்த வண்டி என்று தெரியும். இருந்தாலும் இப்போதே இவ்வளவு தீவிரம் காட்டுவதற்குக் காரணம், ‘மலைக்கோட்டை மாநகர் ஈஸ்ட்டுக்கு’ எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரலாம் என்பதால்தானாம். இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் 5 தொகுதிகளிலும் விசில் கட்சி பூர்வாங்க வேலைகளைத் தொடங்கிவிட்டது.
இந்தத் தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் வியூகக் குழுக்கள், எங்கிருந்தெல்லாம் பிரச்சினை வெடிக்கும், யார் யாரை எல்லாம் எந்த ரூட்டில் சரிக்கட்ட வேண்டி இருக்கும் என சார்ட் போட்டுக் கொண்டிருக்கிறது. மலைக்கோட்டை மாநகரத்தைப் பொறுத்தவரை, தலைவர் போட்டியிட்ட தொகுதி என்பதால், எதிர்த்து நிற்பவர்களை காப்புத் தொகையை காவுகொடுக்கும் நிலைக்குத் தள்ள வேண்டும் என ஸ்கெட்ச் போடுகிறதாம் விசில் வியூகக் குழு.
அதேநேரத்தில், இந்தத் தொகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே நிறுத்தி எப்படியும் விசிலுக்கு விக்கலை வரவைக்க வேண்டும் என்பதில் சூரியக் கட்சி தரப்பிலும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மலைக்கோட்டையின் இரண்டு முன்னாள் மாண்புமிகுக்களும் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.
வெளியில் நடமாடினால் இவர்கள் வகுக்கும் வியூகங்களை சமாளிக்க முடியாது என்று தெரிந்ததால்தான் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட சூட்டோடு ஜூனியர் மாண்புமிகுவை தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்களாம். அடுத்ததாக, பணியாளர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக மலைக்கோட்டை முன்னாள் மாண்புமிகு போட்ட சீராய்வு மனுவும் டிஸ்மிஸ் ஆகிவிட்டதால், அசுர வேகத்தில் லஞ்ச வழக்கைப் பாய்ச்சி அவரையும் உள்ளே தூக்கி வைக்க உத்தரவுகள் பறந்திருக்கிறதாம்.
இருவரையும் உள்ளே வைத்துப் பாடம் படித்தாலே அதன் தொடர் நடவடிக்கைகளுக்குள்ளேயே அவர்களை முடக்கிவிடலாம் என்பது பனையூர் தலைமையின் பாலிடிக்ஸ் கணக்காம். பிணையில் வந்தாலும் ‘பித்தலாட்டங்கள் பாரீர்’ என்று பிரச்சாரத்தில் அவர்களை டேமேஜ் செய்வதுடன், இருவரும் வழக்கு, வாய்தாக்களில் இருந்து சகஜமாவதற்குள்ளாக ‘மலைக்கோட்டை ஈஸ்ட் வேலைகளை’ மனம்போல் முடித்துவிடலாம் என நினைக்கிறார்களாம்.