அனைத்துத் துறைகளிலும் திருவாளர் ‘குலுக்கல்’ ஆதிக்கம் | உள்குத்து உளவாளி

அனைத்துத் துறைகளிலும் திருவாளர் ‘குலுக்கல்’ ஆதிக்கம் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

ஆட்சி நிர்வாகத்தில் ‘குலுக்கல்’ மாப்பிள்ளையின் ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைவதால் எங்கே போய் முறையிடுவது என்று தெரியாமல் மற்ற துறைகளுக்கான மாண்புமிகுக்கள் தவியாய் தவித்துக் கொண்டு இருக்கிறார்களாம். பட்டியல் போட்ட போதே தனது தரப்பு ஆட்கள் சிலரை மாண்புமிகு இருக்கையில் தந்திரமாக அமரவைத்துவிட்டார் திருவாளர் ’குலுக்கல்’.

அவர்களின் அசைவுகளை எல்லாம் தனது ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்பவர், இன்னும் சில ஜூனியர்களின் இலாக்காக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள மெனக்கெடுகிறாராம். இதற்காக சில மாண்புமிகுக்களிடம் தனக்கு விசுவாசமான ஒருவரை உதவியாளராக திணித்து வைத்திருக்கிறாராம். அவர்கள் மூலமாக முக்கிய தகவல்களை தெரிந்து கொண்டு டீல்களை முன்கூட்டியே முடித்து விடுகிறாராம்.

இதனால் பொங்கிவெடித்த சிலர், விஷயத்தை ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு காதில் போட்டார்களாம். அவரோ, “நான் பாத்துக்கறேன்” என்று கூலாகச் சொல்லிவிட்டு கூலிங் மோடுக்குப் போய்விட்டாராம். அண்மையில், விளைச்சல் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது 6 மாண்புமிகுக்கள் கலந்து கொண்டார்களாம். ஆனால், ‘குலுக்கல்’ மாப்பிள்ளை மட்டும் நிதியின் உயரதிகாரியை தனக்குப் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு, தானே அனைத்தையும் பேசினாராம்.

துறை அமைச்சரையே மூச்சுவிடக்கூட விடவில்லையாம். எதற்கோ ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு பதில்சொல்ல முயன்றபோதுகூட, “கொஞ்சம் அமைதியா இருங்கண்ணே... நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி அமட்டிவிட்டாராம். இதில் ‘மகிழ்ச்சிக்கே’ பேரதிர்ச்சியாம். எக்ஸ்ட்ரா தகவல் என்னவென்றால், சக அமைச்சர்களின் துறைகளில் மட்டுமல்லாது முதன்மையானவரின் முக்கியத் துறைகளிலே ‘முடிந்தவரைக்கும்’ புகுந்து புறப்பட்டு வருகிறாராம் மிஸ்டர் ‘குலுக்கல்’.

அனைத்துத் துறைகளிலும் திருவாளர் ‘குலுக்கல்’ ஆதிக்கம் | உள்குத்து உளவாளி
கதர் பார்ட்டி சீனியர்களின் புதிய முயற்சி | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in