

இடைத்தேர்தல் தொகுதிகளில் விசில் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான கேள்வியே, “எவ்வளவு வாங்கிட்டு கட்சி மாறுனீங்க?” என்பதாகத்தான் இருக்கிறது. வேட்பாளர்கள், தலையில் அடித்து சத்தியம் செய்தாலும் அவர்கள் சொல்வதை யாரும் நம்புவதாக இல்லை.
இந்த நிலையில், அடுத்த ரவுண்டில் இடைத்தேர்தலை எதிர்பார்த்து இருக்கும் ‘துறையான’ தொகுதியில் போட்டியிடத் தயாராகி வரும் ‘ஜெய’ பிரமுகரானவர் முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இப்போதே அலெர்ட் ஆகி வருகிறாராம். தேர்தல் அறிவித்த பிறகு தொகுதிக்குள் போய் ஏடாகூடமாக சிக்கிச் சின்னாபின்னமாகிவிடக் கூடாது என்பதற்காக, இப்போதே தினம் ஒரு பகுதியாக தொகுதி வலம் போகிறாராம்.
போகும் இடமெல்லாம், தொகுதிக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்களிடம் பட்டியல் போடும் அவர், “அடுத்து நான் வந்தால் இதையெல்லாம் கண்டிப்பா செய்து கொடுப்பேன்” என்று வாக்குறுதிகளையும் எடுத்து வீசுகிறாராம். அப்படியும் சிலர், “ஆமா.. எதுக்கு நீங்க கட்சி மாறுனீங்க?” என்று கொக்கி போடுகிறார்களாம். அவர்களை தந்திரமாகச் சமாதானப்படுத்தும் ‘ஜெய’ பிரமுகர், “இப்ப... நான் உங்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுக்கிறேன்.
இலைக் கட்சியில எம்எல்ஏவா இருந்தா இதையெல்லாம் நிறைவேற்ற முடியுமா? அதனாலதான் ஆளுங்கட்சிக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போச்சு. ஆக, நான் கட்சி மாறுனது எனக்காக இல்லை; தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான்னு புரிஞ்சுக்குங்க” என்று சப்பைக் கட்டு கட்டி வருகிறாராம்.