

‘கோட்டை’ மாவட்டத்தின் ‘கோட்டை’ தொகுதியின் மணியான விசில் எம்எல்ஏ-வை வந்த இடத்திலும் வாட்டி வதைக்கிறார்களாம். ஏற்கெனவே இலைக் கட்சியில் மாண்புமிகு வரைக்கும் பதவிகளைப் பார்த்தவர் திருவாளர் ‘மணி’.
ஆனால், அவரைவிட ஜூனியரான வெவரமான விஜயமானவர் கட்சிக்குள் தலையெடுத்ததும் மணியானவரை தடம் தெரியாமல் ஆக்கினார். இம்முறை விருப்ப மனு கொடுத்தும் அவருக்கு கட்சியில் சீட் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அந்த வருத்தத்தில் விசில் பார்ட்டியில் சேர்ந்து எம்எல்ஏ-வும் ஆகிவிட்டார்.
ஆனால், ‘முன்னாள் மாண்புமிகு’ பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளங்கள் இருப்பதால் இவர் எந்தக் காலத்திலும் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என தந்திரக் கணக்குப் போடுகிறார்களாம் விசில் பார்ட்டி தலைகள்.
அண்மையில் மாவட்டத் தலைநகரில் நூறு நாள் சாதனை விளக்க நிகழ்வை நடத்திய போதுகூட ‘மணியானவர்’ பெயரை போஸ்டர்களில் போடாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.
அவருக்கு முறையான அழைப்பும் இல்லையாம். இப்படி பலமுறை நடந்துவிட்டது என்பதால் ‘மணியானவரும்’ சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே புறக்கணித்திருக்கிறார்.
போதாக்குறைக்கு, யாரை பகைத்துக் கொண்டு இலைக் கட்சியில் இருந்து விசில் பார்ட்டிக்கு வந்தாரோ அவரும் இப்போது விசில் பார்ட்டிக்கே விஜயமாகி விட்டதால், ‘இனி எங்கிட்டுடா போறது’ என்று ‘மணியானவர்’ மனம் நொந்து கிடக்கிறாராம்.