

சூரியக் கட்சி ஆட்சியின் போது மலைக்கோட்டை மாவட்டத்தில் ‘ஜனநாயக’ மாநாட்டை ஜெகஜோதியாக நடத்தி முடித்தது சீறும் கட்சி. அந்த சமயத்தில் மாநாட்டுக்கான பெரும்பகுதி செலவை இப்போது விசில் பார்ட்டியில் இருக்கும் குலுக்கல் ‘மாப்பிள்ளையே’ கவனித்துக் கொண்டாராம்.
பத்தும் பத்தாத செலவுகளுக்கு சூரியக் கட்சி தரப்பில் இருந்தும் ‘கவனிப்பு’ வந்ததாம். இதையெல்லாம் வைத்து அந்த மாநாட்டைப் பேசுபொருளாக்கினார்கள்.
அதேபோல், இப்போதும் தங்கள் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பேட்டையில்’ எழுச்சி மாநாட்டைக் கூட்டுகிறது சீறும் கட்சி.
இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்தாலும் கட்சி நிர்வாகிகள் கையில் ‘பசை’ இல்லாமல் ரொம்பவே பதற்றமாகிறார்களாம். கடந்த ஆட்சியில் இவர்களின் தேவைகளுக்கு ‘தீபம் மாவட்ட’ அமைச்சரும் அவ்வப்போது ’அளித்து’ உதவினாராம். தற்போது அந்த ரூட்டும் அடைபட்டு விட்டது.
இத்தனைக்கும் சொந்தக் கட்சியிலேயே இப்போது அமைச்சர் ஒருவர் இருந்தும் ‘லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்’ என்று விறைப்பாக நிற்பதால் ‘வரத்துக்கு’ வழியில்லாமல் இருக்கிறதாம். ஆகமொத்தத்தில், அரசியல் நிலைப்பாட்டால் அணி மாறிவிட்டு இப்போது ‘மணி’க்கு வழியில்லாமல் மறுகிக்கொண்டு இருக்கிறது சீறும் கட்சி.