

எப்படியும் ஆட்சியை தக்கவைத்தாக வேண்டும் என்ற தீர்மானத்துடன் தேர்தலில் கூட்டணி தோழர்களுக்கும் கஜானா கதவை தாராளமாக திறந்துவிட்டது சூரியக் கட்சி. இதற்கான பெரும்பகுதி பொறுப்பை ‘தீபம்’ மாவட்ட இனிஷியல் மாண்புமிகு வசம் ஒப்படைத்திருந்தார்கள். இதில் மாம்பழ சிட்டிக்கு பக்கத்து மாவட்டத்தில் போட்டியிட்ட கதர் கட்சியின் ‘தமிழ்’ வேட்பாளர், தனது ‘பங்களிப்பையும்’ சூரியக் கட்சி தலைமையிடமே கொடுத்து தேர்தல் செலவு கணக்கில் சேர்த்து செலவழிக்கச் சொல்லி இருந்தாராம்.
ஆனால் அந்த மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கான பொறுப்பை ஏற்றிருந்த ‘பெல்’ பிரமுகர், தலைமையிலிருந்து வந்திருந்த ‘கட்டுகளில்’ பெரும்பகுதியை தனக்காக ‘கட்டம் கட்டிக்’ கொண்டாராம். இதனால், களத்தில் நின்ற வேட்பாளர்கள் கைச்செலவுக்கு ரொம்பவே திணறிப் போனார்களாம். இது விஷயமாக கதர் வேட்பாளர் சூரியக் கட்சி தலைமையிடம் அப்போதே சுடச் சுட புகார் சொல்லி இருந்தாராம். இதையடுத்து, கஜானா பொறுப்பை ஏற்றிருந்த ‘தீபம்’ மாவட்ட இனிஷியல் புள்ளியை அழைத்து விசாரணை நடத்தியதாம் சூரியக் கட்சி தலைமை.
அதனைத் தொடர்ந்து அண்மையில் ‘பெல்’ பிரமுகரை தனது இருப்பிடத்துக்கே வரவைத்த இனிஷியல் புள்ளி, தேர்தல் வரவு - செலவுகளை ஒப்படைக்கும்படி சொன்னாராம். அவரும், ‘வந்தது’ முழுவதையும் பட்டுவாடா செய்துவிட்டதாக பக்கா கணக்குக் கொடுத்தாராம். அதைப் பார்த்து இன்னும் சூடான இனிஷியல், “நீ யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தேன்ற கணக்கு எல்லாம் எங்கக்கிட்ட இருக்கு. உண்மையச் சொல்றியா.. இல்ல...” என்று இழுத்தாராம்.
அப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றாராம் ‘பெல்’. இனி பேசி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த இனிஷியல் புள்ளி, தனது ஆட்களை விட்டு ‘பெல்’லுக்கு ஒரு ரவுண்டு ‘பாலீஷ்’ போட்டாராம்.
அதற்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தலை தொங்கியவர் அரை மயக்கத்திலேயே, பதுக்கிய கரன்சி கட்டுகள் எங்கெல்லாம் இருக்கிறது என்ற விவரத்தை ஒப்பித்தாராம். அவரை அங்கு படுக்க வைத்துக் கொண்டே ‘பெல்லாரின்’ சொந்த மாவட்டத்துக்கு தனது ஆட்களை அனுப்பிய இனிஷியலார், பதுக்கல் கரன்சி முழுவதையும் பறிமுதல் செய்து தனது இருப்பிடம் கொண்டு வந்து சேர்த்தாராம்.
அதேசமயம், ‘பாலீஷ்’ உக்ரத்தில் முகமெல்லாம் ‘பணியாரமாகிக்’ கிடந்த மிஸ்டர் ‘பெல்லாரை’ இரண்டு நாட்கள் தனது இருப்பிடத்திலேயே தங்கவைத்து முறையாக ‘ட்ரீட்மென்ட்’ எல்லாம் கொடுத்து ‘பாலீஷ்’ போட்ட சுவடே தெரியாமல் அவரை சொந்த ஊருக்கு பத்திரமாக வழியனுப்பி வைத்தாராம் இனிஷியலார். வழக்கமாக ஆச்சா ஊச்சா என டாம்பீகம் செய்யும் ‘பெல்லார்’ இந்த ‘பாலீஷ்’ ட்ரீட்மென்டுக்குப் பிறகு சப்த நாடியும் அடங்கிக் கிடக்கிறாராம்.