

‘கதர்’ கட்சியின் ‘வெல்த்’ தலைவரானவர், “ஆளை விடுங்கப்பா சாமி” என கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி ஓடும் திட்டத்தில் இருக்கிறார். கட்சித் தலைமையும் இவருக்குப் பதிலாக புதியவரை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கிறது.
இதற்கு நடுவே, தேர்தல் சமயத்தில் நிதி பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களில் நடந்த ‘நம்பர் டூ’ வேலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். இதன் முடிவுகள் முழுமையாக வெளிவந்தால் ‘வெல்த்’ தலைவருக்கும் சிலர் வேட்டு வைக்கலாம் என்கிறார்கள்.
இதனால் இனிமேல் கதர் பார்ட்டியில் இருந்து குப்பை கொட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் மிஸ்டர் ‘வெல்த்’, மாற்று முகாம் தேடும் யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தனக்கு இத்தனை நாளும் ‘வாழ்வளித்து’ அரவணைத்துச் சென்ற சூரியக் கட்சியிலேயே சேர்ந்துவிட்டால் என்ன என்பதும் தலைவரின் யோசனையில் இருக்கிறதாம்.
இது ஒருபுறமிருக்க, தாமரைக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த கபிஸ்தல தலைவரையும் தங்கள் பக்கம் கொண்டுவர சூரியக் கட்சி தரப்பில் முயற்சிகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.