

‘புகழ்பெற்ற ‘புத்தூர்’ ஆண்டாள் கோயில் சம்பந்தப்பட்ட துளசிக் கடை, பிரசாத ஸ்டால், கார் பார்க்கிங் உள்ளிட்டவைக்கு அண்மையில் அறநிலையத் துறை அதிகாரிகள் டெண்டர்விட்டு முடித்தார்களாம். இதை லேட்டாகத் தெரிந்து கொண்ட அந்தத் தொகுதியின் ஆளும் கட்சி எம்எல்ஏ-வானவர், நேரடியாக கோயில் உயரதிகாரி ஒருவருக்குப் போன் போட்டு, “எனக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் எப்படி நீங்கள் டெண்டர் விட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினாராம்.
எப்போதும் ‘ஹை பிட்சில்’ பேசியே பழகிவிட்ட அந்த பெண் அதிகாரியும், “இது வழக்கமான நடைமுறை தான். இதையெல்லாம் அமைச்சருக்கே நாங்கள் சொல்றதில்ல... உங்களுக்கு என்னாத்துக்குச் சொல்லணும்?” என்று எதிர்கேள்வி எழுப்பினாராம்.
இதையடுத்து, இது விஷயமாக எம்எல்ஏ-வானவர் மேலிடத்தைத் தொடர்பு கொண்டு, “இந்தம்மா இன்னமும் சூரியக் கட்சி மென்டாலிட்டியிலயே இருக்காங்க. அதனால கோயில் டெண்டர்களை எல்லாம் சூரியக்கட்சிக்காரங்களுக்கே கொடுக்காங்க” என்று புகார் வாசித்தாராம்.
இதையடுத்து அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது விஷயமாக, சம்பந்தப்பட்ட அந்த பெண் அதிகாரியைக் கேட்டால், “ரத்தெல்லாம் செய்யவில்லை. சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பதால் டெண்டரை நிறுத்தி வைத்திருக்கிறோம்” என்று ‘ஈயம் பூசுகிறாராம்’.