விசில் தலைவர் - கதர் பார்ட்டி ‘சீமான்’ சந்திப்பு பின்னணி | உள்குத்து உளவாளி

விசில் தலைவர் - கதர் பார்ட்டி ‘சீமான்’ சந்திப்பு பின்னணி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“விசில் தலைவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. இந்த தேர்தலில் தோற்றுப் போவார். அடுத்த தேர்தலுக்கு தாக்குப்பிடிக்க மாட்டார்..” என்றெல்லாம் ‘கணிப்பு வசனம்’ பேசி வந்த கதர் பார்ட்டி சீமான், அண்மையில் விசில் தலைவரை ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துப் பேசினார்.

ஏற்கெனவே, தங்களின் அன்புத் தலைவரை சந்திக்க விசில் தலைவர் அப்பாயின்மென்ட் கேட்டு காத்திருப்பதாக செய்தி பரப்பிய சீமானின் விசுவாச வட்டம், “விசில் தலைவர், எங்க தலைவரோட நுங்கம்பாக்கம் வீட்டுக்குப் போறதாத்தான் இருந்துச்சு. ஆனா, இப்ப அந்த வீட்டுல ரிப்பேர் வொர்க் போயிட்டு இருக்கு. அதனால எங்க தலைவர் கோட்டைக்கே வந்துட்டாரு. டெல்லி இளம் தலைவர் சொல்லித்தான் இந்த சந்திப்பே நடந்திருக்கு” என்று பிரேக்கிங் நியூஸ் போடுகிறார்கள்.

சீமானின் சொந்த தொகுதியில் இருக்கும் அவரது உட்கட்சி ‘நண்பர்களோ’ கடும் விமர்சனங்களை தெறிக்க விடுகிறார்கள். தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என சீமானின் விசில் தலைவர் பற்றிய 7 சிந்தனைகளை பட்டியல் போடும் அந்த ‘நண்பர்கள்’, “இதிலிருந்து என்ன தெரிகிறது... அரசியலில் யாரும் அனைத்தும் அறிந்த ஞானியும் அல்ல; யாரும் உடைந்து போன ஓட்டை போனியும் அல்ல” என்று சீமானின் சீரைக் கெடுத்து வருகிறார்கள். இன்னொரு தரப்போ, “ராஜ்யசபா சீட், மாநில திட்ட கமிஷன் துணைத் தலைவர் பதவி விஷயமாகத்தான் சீமான் சிரித்த முகத்துடன் கோட்டைக்குப் போனார்” என்றும் சொல்கிறார்கள்.

சீமான் தலைவர் மத்தியில் மாண்புமிகுவாக இருந்தபோது அவருக்கு தனிச் செயலாளராக இருந்த அதிகாரிதான் தற்போது தமிழக கஜானா துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் பழைய நெருக்கத்தில் விசில் தலைவர் - சீமான் சந்திப்புக்கு உடனடியாக ஏற்பாடு செய்தாராம்.

விசில் தலைவர் - கதர் பார்ட்டி ‘சீமான்’ சந்திப்பு பின்னணி | உள்குத்து உளவாளி
டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in