

தூங்கா நகர் மாவட்டத்தின் ‘சோழமான’ தனித் தொகுதிக்குள் அந்த மாவட்ட ‘கீர்த்தி’ மாண்புமிகுவின் பிரம்மாண்ட குவாரி விவகாரங்கள் இருக்கின்றனவாம்.
இதனால் தனக்கு ஆதரவானவர்கள் அல்லாமல் வேறு யாரும் அங்கே எம்எல்ஏ-க்களாக வந்தால், தொழிலுக்கு தேவையில்லாமல் தொல்லை கொடுப்பார்கள் என கவலைப்படும் திருவாளர் ‘கீர்த்தி’, அந்தத் தொகுதியில் தன்னால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ள ‘திருப்பதி’ பிரமுகரை ஜெயிக்க வைக்க தாராளமாக செலவு செய்கிறாராம்.
அவருக்கு மாத்திரமல்லாது அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை ‘மயக்கிப்’ போடவும் கரன்சிகளை கட்டுக் கட்டாக இறக்குகிறாராம். இலைக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த முருகனின் பெயர் கொண்ட மருத்துவர் ஐயா ஒருவர் இம்முறை அந்தக் கட்சியில் சீட் கிடைக்காததால் ‘சின்னம்மா’ கட்சியில் சீட்டை வாங்கி நிற்கிறார்.
செலவுக்கு தஞ்சை பக்கமிருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்துத் தான் இவர் களமிறங்கினாராம். ஆனால், அங்கிருந்து எதுவும் பெரிதாக பெயராததால் அப்செட்டில் இருக்கிறாராம் மருத்துவர். தனது சொந்த செல்வாக்கால் இவர் சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பிரிக்கலாம் என அனுபவஸ்தர்கள் சொன்னதை அடுத்து இவரையும் தனது ‘மகிமையால்’ மயக்கிப் போட்டுவிட்டாராம் மிஸ்டர் ‘கீர்த்தியார்’.