மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி. இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியலினத்தவர், வெள்ளாளர் உள்ளிட்ட சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா 87,172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சிவா.ராஜமாணிக்கம் 49,779 வாக்குகள் பெற்று 37,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அமமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் 40,481 வாக்குகள் பெற்றார். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும், அமைச்சருமான டிஆர்பி.ராஜா, அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பாரதிச்செல்வன், தவெக சார்பில் யுவிஎம்.ராஜராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து 3 முறை இந்தத் தொகுதி எம்எல்ஏவாக உள்ள டிஆர்பி.ராஜா, மன்னார்குடியில் புதை சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையம், ஜவுளி பூங்கா உட்பட ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றித் தருவேன் எனவும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.
அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், தொடர்ந்து 2 முறை தேர்தலில் போட்டியிட்டும் வாய்ப்பு அளிக்கவில்லை என்றும், இந்த முறை வாய்ப்பு தந்தால், நிச்சயம் தேவையான வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வேன் எனவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடுவதால், கடந்த தேர்தலில் இவ்விரு கட்சிகளும் வாங்கிய வாக்குகளை சேர்த்தால், திமுகவை விட அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால், இந்த முறை எப்படியும் வென்றே தீருவது என கங்கணம் கட்டி அமமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த முறை தவெகவும் களத்தில் உள்ளதால், முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். மன்னார்குடி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளர் யார் என்பது மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும்.
எதிர்பார்ப்புகள்
* மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.
* பாமணி உரத் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரித்து, தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
* வேளாண் உற்பத்தி பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
* மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 93 குளங்களை இணைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.
* வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை வழங்க வேண்டும்.
* மன்னார்குடியை மையமாகக் கொண்ட மாவட்டத் தலைநகரம் அமைக்க வேண்டும்.
* வடுவூரை மையமாகக் கொண்டு தனி ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும்.
* மூவாநல்லூரில் அமைக்கப்பட்டதைப் போன்று தொகுதி முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.
* நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க வேண்டும்.
* சென்னை- கும்பகோணம் நான்கு வழிச்சாலையை மன்னார்குடி வழியாக அதிராம்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும்.
* மன்னார்குடி அரசு மருத்துவமனை யில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். இருதயநோய், மூளை நரம்பியல், சிறுநீரக பிரிவு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1952 - சுப்பையா, எம்.கந்தசாமி - இ.கம்யூ. (இரட்டை உறுப்பினர்)
1957 - டிஎஸ்.சுவாமிநாத உடையார் - காங்.
1962 - டிஎஸ்.சுவாமிநாத உடையார் - காங்.
1967 - டிஎஸ்.சுவாமிநாத உடையார் - காங்.
1971 - கு.பாலகிருஷ்ணன் - திமுக
1977 - மன்னை மு.அம்பிகாபதி - இ.கம்யூ.
1980 - மன்னை மு.அம்பிகாபதி - இ.கம்யூ.
1984 - சா.ஞானசுந்தரம் - அதிமுக
1989 - கே.ராமச்சந்திரன் - திமுக
1991 - கு.சீனிவாசன் - அதிமுக
1996 - வை.சிவபுண்ணியம் - இ.கம்யூ.
2001 - வை.சிவபுண்ணியம் - இ.கம்யூ.
2006 - வை.சிவபுண்ணியம் - இ.கம்யூ.
2011 - டிஆர்பி.ராஜா - திமுக
2016 - டிஆர்பி.ராஜா - திமுக
2021 - டிஆர்பி.ராஜா - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,12,530
பெண்கள் - 1,19,401
மூன்றாம் பாலினத்தவர் - 4
மொத்தம் - 2,31,935