மதுரை: திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, அமைச்சர் பெயரை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த மோசடி பட்டியல் நீள்கிறது. இந்த வழக்கில் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர, தற்போது அமைச்சருக்கு உதவியாளராக உள்ள மேலும் 2 பேரை அழைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்ததால், இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக இருந்த ஜெய் பாலாஜி (42). அவரது மனைவி கலாவதி (42) ஆகியோர் மோசடி வழக்கில் சமீபத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரை ஓராண்டுக்கு முன் வேலையை விட்டு நிறுத்திய நிலையில், அவர் அமைச்சர் பெயரை பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள், பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.
அவரின் மோசடி பட்டியல் நீள்வதால், ஜெய்பாலாஜி, அவரது மனைவி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கையை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் வினோதினி மேற்கொண்டுள்ளார்.
அதனால், இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறுவதற்கு நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெய்பாலாஜி, அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய அரசு அதிகாரிகள், நண்பர்கள், அரசியல் புள்ளிகள் ஒவ்வொருவரையும் அழைத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த அடிப்படையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் தற்போது உதவியாளர்களாக இருக்கும் தனசேகரன், வருண் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று அழைத்து விசாரித்தனர்.
விசுவநாதபுரத்திலுள்ள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில், இந்த இருவரிடமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல் உதவி ஆணையர் வினோதினி தலைமையிலான போலீஸார் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர்.
அமைச்சரிடம் உதவியாளராக இருந்த காலத்தில் ஜெய் பாலாஜியின் நடவடிக்கைகள், அவரை எப்போது இருந்து தெரியும், அவருடன் தொடர்பில் இருந்த நெருக்கமான அரசு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், நண்பர்கள் யார், யாருடன் தொடர்பு வைத்திருந்தார், அவரை பார்க்க யாரெல்லாம் அமைச்சர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள், அமைச்சர் சொல்லும் என்ன மாதிரியான பணிகளை அவர் செய்து வந்தார் போன்ற பல்வேறு கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கான பதில்களை விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
மீண்டும் தேவைப்படும்போது, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று எழுத்துப்பூர்வ கடிதம் வாங்கிக்கொண்டு இருவரையும் அனுப்பினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெய்பாலாஜி அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான வழியில் ரூ. 150 கோடிக்கு மேல் சம்பாதித்து இருப்பதாக தற்போது விசாரணையில் சில தகவல் கிடைக்கிறது. இதை உறுதி செய்வதற்கு பல்வேறு ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது.
அவர் அமைச்சரிடம் இருந்த காலத்தில் மோசடியில் ஈடுபட்ட வழிமுறைகள், ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் சம்பாதித்தாரா? போன்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். இதற்காக ஜெய்பாலாஜி குறித்து அமைச்சரின் தற்போதைய உதவியாளர்களான தனசேகரன் (அமைச்சர் அலுவலகம்), வருண் (அமைச்சர் வீடு) விசாரித்தோம். இதன்மூலம் ஜெய்பாலாஜி, அவரது மனைவி குறித்த சில தகவல்களை சேரித்துள்ளோம்.
இவ்வழக்கில் அமைச்சரின் தற்போதைய உதவியாளர்கள் தனசேகரன், வருண் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது, ’ என்றனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு போல், இந்த மோசடியும் ஜெய் பாலாஜி, அவரது மனைவியுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றும், சங்கிலித்தொடர் போல் நீளும் என்று போலீஸார் தெரிவித்தனர். தமிழக அரசும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், இந்த வழக்கை மிக தீவிரமாகவும், விரைவாகவும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளதாலேயே, இந்த வழக்கு வேகம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.