

சென்னை: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் ஜெம் வீரமணி, தன்னை மிரட்டி பணம் பறித்தவர்களின் பட்டியலை போலீஸாரிடம் வழங்கி உள்ளார்.
ஏழை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, கணவர் மகேந்திர சிம்மன், முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் கார் ஓட்டுநர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில், இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வீரமணி மீது இதுவரை 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குண்டர் சட்டமும் வீரமணி மீது பாய்ந்துள்ளது. முன்னதாக வீரமணியை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு போலீஸ் அதிகாரிகளிடமும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றனர்.
இந்நிலையில், கூடுதல் தகவல்களை திரட்டும் வகையில் வீரமணியை போலீஸார் மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
அவருக்கு 84 வயது ஆவதால், வயது முதுமை மற்றும் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து புழல் சிறைக்கே சென்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மிரட்டி பணம் பறித்தவர்கள் குறித்த முழு விவரத்தையும் வீரமணி தெரிவித்துள்ளார். அதை அடிப்படையாக வைத்து போலீஸார் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை அறிக்கை
விசாரணையின் விவரம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் வரும் 27-ம் தேதி அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்.29 வரை நீதிமன்றக் காவல்
ஜெம் வீரமணியை 4-வது பாலியல் வழக்கில் போலீஸார் கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பாக ஆஜர்படுத்தினர். அந்த வழக்கில் அவரை வரும் அக்.29 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரகாஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜெம் வீரமணிக்கு சொந்தமான சொத்துக்களை விற்கவும், பாலியல் வழக்கை மூடி மறைக்கவும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது பதியப்பட்டுள்ள வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோல ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி செம்பியம் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.