

சென்னை: நவராத்திரி கொண்டாட்டத்தின்போது மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், கேலிக்கூத்துகளுடன் கூடிய திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாரத் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கே.டில்லிபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நவராத்திரி, ஆயுதபூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
முன்பெல்லாம் நவராத்திரி கலை நிகழ்ச்சிகளாக ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகள், முப்பெரும் தேவியரின் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட நடன, நாட்டியங்கள், இசைக் கச்சேரிகள் நடத்தப்படும்.
ஆனால், தற்போது கலாச்சார சீரழிவு காரணமாக பணம் சம்பாதிக்கும் நோக்குடன் சென்னையில் பல்வேறு தனியார் விடுதிகளில் விருந்து நிகழ்வுகள், திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பூஜை விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இதற்காக பார்வையாளர்களிடம் தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் துர்காதேவி சிலையை வைத்து திரைப்படப் பாடல்களுடன் கூடிய நடன நிகழ்ச்சிகள், பாப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி தரக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன், ‘‘நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா, தாண்டியா நடனங்கள் ஓர் அங்கம் என்றாலும், மதுபானம் பரிமாறுவது, மேற்கத்திய இசையுடன் கூடிய நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘இதுபோன்ற நிகழ்வுகளுக்கு போலீஸார் கவனமுடன் அனுமதி அளிக்க வேண்டும். நிபந்தனைகளை மீறி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், கேலிக்கூத்து, திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவி்ட்டார்.