ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் குதிரை பேரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் குதிரை பேரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ-வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திருப்பூர் வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் வரும் திங்களன்று இந்த வழக்கை மீண்டும் விசாரி்க்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்றைக்குள் (நேற்று) இந்த வழக்கில் தீர்பபளிக்கப்படும், என தெரிவித்திருந்தனர்.

அதன்படி நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோருகிறார்.

இந்த வழக்கில் மாநில போலீஸார் புலன் விசாரணை செய்து 9 பேரை கைது செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டு மென்ற மனுதாரரின் கோரிக் கையை ஏற்க இயலாது.

பொதுநல மனுக்கள் குரலற்ற மக்களின் குரலாக நீதித்துறையை செம்மைப்படுத்தும் கருவியாக உள்ள நிலையில், பொதுநல வழக்கு என்ற பெயரில்

தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை மேலும் விசாரிக்க முடியாது’’, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் குதிரை பேரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
எங்கள் பரிந்துரைகளை சேர்த்திருந்தால் தொகுதி மறுவரையறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்காது: ஆர்.எஸ்.பாரதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in