

பியூஷ் கோயல் | கோப்புப் படம்
“அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக எங்களது இதயங்கள் ஒன்றிணைந்துள்ளன. நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். குடும்ப விஷயங்கள் வீட்டுக்குள்ளேயே விவாதிக்கப்படும். அதை பொதுவெளியில் விவாதிக்க மாட்டோம்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மதுரையில் இன்று (மார்ச் 1) நடைபெறும் அரசு விழாவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதுரை வந்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் மார்ச் 1-ல் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் தரிசனம் செய்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பின்பு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திமுக அரசு, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்காமல் தடுத்தது வெட்கக்கேடானது. இதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை திமுக அரசு புண்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மீது மதிப்பு, மரியாதை வைத்து முதல்வராக்கினார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகள், லட்சியங்களை மறந்து திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர் செல்வத்தை, சுயமரியாதை உள்ள தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் தேவையற்றவராக மாறிவிட்டார்.
அதிமுக,பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக எங்களது இதயங்கள் ஒன்றிணைந்துள்ளன. நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். குடும்ப விஷயங்கள் வீட்டுக்குள்ளேயே விவாதிக்கப்படும். அதை பொதுவெளியில் விவாதிக்க மாட்டோம்.
தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகிறோம். தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாட்சியையும், பெண்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும் மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.