

சென்னை: சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முரளிதர மகாலி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவடைந்ததால், ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் திறக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாகும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்றத்தில்..
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், வில்சன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளி்த்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர மகாலி கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக சுமார் ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்களுக்கான நேர ஒதுக்கீட்டில் எந்த தட்டுப்பாடும் இல்லை. 2022-23-ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் 5-வது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது.
இந்த விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும் புதிய ஏடிசி கோபுரம் மற்றும் தொழில்நுட்ப பகுதி பணிகள் 76 சதவீதம் முடிந்துவிட்டன.
கோவை விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ஏற்கெனவே உள்ள முனைய கட்டிடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.