

சென்னை: கபாலீஸ்வரர் கோயில் நிலத்துக்கான குத்தகை வாடகை பாக்கி ரூ.9.74 கோடியை செலுத்த மறுத்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை பகுதியில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்தை தலைவலி நிவாரண தைலம் தயாரிப்பில் பிரபலமான அம்ருதாஞ்சன் நிறுவனம் கடந்த 1901-ல் மாதம் ரூ.1400 என்ற வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்றிருந்தது.
இந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் இந்த மாத வாடகையை அறநிலையத் துறை ரூ.3.3 லட்சமாக நிர்ணயம் செய்து கடந்த 2001-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2005-ல் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவில், “அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் ஆஜராகி, “மனுதாரர் நிறுவனத்திடமிருந்து 2018-ம் ஆண்டு கோயில் நிலம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு வரை அந்த நிறுவனம் வாடகை பாக்கியாக ரூ.9.74 கோடி நிலுவை வைத்துள்ளது” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்துள்ளது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த நிலத்தை மனுதாரர் நிறுவனத்துக்கு குத்தகை மாற்றம் செய்துள்ளார்.
அதன்படி அந்த நிறுவனம் வாடகையை முறையாக செலுத்தவில்லை என்பதால்தான் தனி நீதிபதி அந்த தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். கோயிலில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மற்றும் மத ரீதியிலான சடங்குகளை நிகழ்த்த கோயில் நிர்வாகங்கள் இதுபோன்ற குத்தகை வாடகை வருமானத்தையே நம்பியுள்ளன.
எனவே தனி நீதிபதியின் உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம்” எனக்கூறி அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.