

சென்னை: கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி கட்டாயம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2023-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, “சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது” உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த செப்.17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவில், “கடலில் சிலைகளை கரைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவது கட்டாயம். அதை இந்த ஆண்டு சிலை கரைப்பின்போதே கடைபிடிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் தினேஷ்குமார் சிங் தலைமையிலான அமர்வி்ல் நேற்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், “சிலைகளை கரைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கிய வழிகாட்டு விதிகளை தமிழக அரசு கடைபிடிக்கும்.
சிலைகளை இயற்கை நீர்நிலைகளில் கரைப்பதற்கு பதிலாக, தற்காலிககுளங்களை அமைத்து, அதில் சிலைகளை கரைக்க, நடவடிக்கை எடுப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்” என கூறப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையின்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்ற அம்சங்கள் தொடர்பாக பதில் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை அக்.13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.