பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிக்கப்படாது: புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த திட்டம்

பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிக்கப்படாது: புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த திட்டம்
Updated on
2 min read

புதுடெல்லி: பொது​மக்​களிடம் ஒரு பைசாகூட யுபிஐ கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்றும் இதை உறுதி செய்ய புதிய கண்​காணிப்பு நடை​முறை அமல் செய்​யப்​படும் என்றும் மத்​திய நிதியமைச்சக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

கடந்த 2016-ம் ஆண்டு இந்​தி​யா​வில் யுபிஐ டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை அறி​முகம் செய்​யப்​பட்​டது. தற்​போது​வரை கூகுள்பே, போன் பே, பேடிஎம், பீம், அமே​சான் பே உள்​ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் விதிக்​கப்​பட​வில்​லை. இந்த சூழலில் தேசிய பணப் பரிவர்த்​தனை கழகம் (என்​பிசிஐ) கடந்த 16-ம் தேதி முக்​கிய அறி​விப்பை வெளி​யிட்​டது. இதன்​படி ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணி​கம் சார்ந்த யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.4 சதவீதம் வரை கட்​ட​ணம் விதிக்​கப்​படும். வரும் அக்​டோபர் 15-ம் தேதி முதல் யுபிஐ புதிய கட்டண நடை​முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

எனினும் தனி​நபர்​களுக்கு இடையி​லான யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்று என்​பிசிஐ திட்டவட்டமாக தெரி​வித்து உள்​ளது. வணி​கர்​களுக்​கான யுபிஐ கட்டண விவர​மும் முன்​கூட்​டியே வெளி​யிடப்​பட்​டிருக்​கிறது.

இதன்​படி ரூ.2,000 வரையி​லான வணிக யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் கிடை​யாது. அதற்கு மேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000-க்கு மேல் ரூ.300 கட்​ட​ணத்தை வணி​கர்​கள் செலுத்த வேண்​டும் என்று என்​பிசிஐ அறி​வித்​துள்ளது.

இதுதொடர்​பாக மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறியதாவது: வணி​கர்​களுக்​கான யுபிஐ கட்டண நடை​முறை வரும் அக்​டோபர் 15-ம் தேதி அமலுக்கு வரு​கிறது.

பொதுமக்களிடம் எவ்​வித கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது என்று திட்​ட​வட்​ட​மாக அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. எனினும் யுபிஐ கட்டணத்தை வணி​கர்​கள் தங்​கள் மீது சுமத்​து​வார்​கள் என்ற அச்சம் பொது​மக்​களிடம் நில​வு​கிறது. இந்த அச்​சத்​தைப் போக்க புதிய கண்​காணிப்பு நடை​முறையை அமல்​படுத்த மத்​திய நிதியமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதன்​படி வணி​கர்​களின் யுபிஐ வணிக பரிவர்த்​தனை​கள் நாள்​தோறும் கண்​காணிக்​கப்​படும். குறிப்​பாக ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணி​கம் சார்ந்த யுபிஐ பரிவர்த்​தனை​கள் ஆய்வு செய்​யப்​படும். இதன்​மூலம் யுபிஐ கட்​ட​ணத்தை பொது​மக்​கள் மீது வணி​கர்​கள் சுமத்​து​வது முழு​மை​யாக தடுக்​கப்​படும்.

பொது​மக்​களிடம் யுபிஐ கட்​ட​ணத்தை வசூலிப்பது கிரிமினல் குற்​றம் ஆகும். இதுதொடர்​பாக சட்​டரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மின்​சா​ரம், குடிநீர், சமையல் காஸ், பெட்​ரோல், மொபைல்​போன், இன்​சூரன்​ஸ், பள்​ளி, கல்​லூரி கட்​ட​ணங்​கள் சார்ந்த வணிக யுபிஐ பரிவர்த்​தனை​யின்​போது பொது​மக்​களிடம் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட வங்கி நிர்​வாகத்​திடம் புகார் அளிக்​கலாம். இந்த புகார்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இதுதொடர்​பான விரி​வான கண்​காணிப்பு நடை​முறையை வரையறுத்து வரு​கிறோம். இதுகுறித்த முழு​மை​யான விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும்.

நாடு முழு​வதும் சுமார் 86 சதவீத யுபிஐ டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​கள் தனி​நபர்​களுக்கு இடை​யில் நடை​பெறுகிறது. வணி​கம் சார்ந்து 14 சதவீத யுபிஐ பரிவர்த்​தனை​கள் மட்​டுமே நடை​பெறுகின்​றன. எனவே புதிய கட்​டண நடை​முறை​யால் யுபிஐ பரிவர்த்​தனை​கள் எந்த வகை​யிலும் குறை​யாது. இவ்​வாறு நிதியமைச்​சக வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிக்கப்படாது: புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த திட்டம்
மனித குலத்துக்கே ‘ஏஐ’ அச்சுறுத்தலா? - விவாதம் வலுப்பதன் பின்புலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in