

சென்னை: அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனிடையே, அவரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது பேசுபொருளாகி உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் குறித்து திமுக மாணவர் அணி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளும் தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், போதைப் பொருள் ஒழிப்பு நாளன்று, சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது வெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல வீடியோ எடுத்து, அதை ‘தக் லைஃப் மொமென்ட்’ என்று ரீல்ஸ் வைரல் ஆனது.
இந்த செயல் இளைஞர்களை தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய போக்கைக் கொண்ட ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழக இளைஞர்களுக்கு நன்மை தராது. எனவே, அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் இன்று (29-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாணவர் அணி நிர்வாகிகள், மாணவர்கள் இதில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோவில் இருந்தது என்ன?
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘தக் லைஃப் மொமன்ட்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றபோது ஸ்மார்ட்போன் மீது பவுடர் போன்ற பொருளை வைத்து ஏடிஎம் கார்டு மூலம் பொடிப்பது போன்ற காட்சி அதில் இருந்தது.
கடந்த 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தில் இந்த வீடியோ காட்சி மீண்டும் வைரலானது. அமைச்சர் சரத்குமார், போதைப் பொருளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, அமைச்சர் சரத்குமார் தனது மனைவியுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒன்றரை வயது குழந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. முழு மாத்திரையை விழுங்க முடியாததால் அதை பவுடராக்கி கொடுத்தேன் என்று அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி திரண்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை - எழும்பூரில் ஆர்ப்பாட்டத்துக்கு மேடை அமைத்த திமுகவினரை தடுத்து போலீஸார், அவர்களை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணியின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கண்டனம்
‘பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உங்களின் ‘தக் லைஃப்’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?
ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழகத்தை ஆள்வது வெட்கக்கேடு. அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழக இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ என்று சமூக வலைதள பதிவு மூலம் திமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.