ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
Updated on
1 min read

ராமேசுவரம்: ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் குழந்தைகள் சிறந்தும், வீடு, விளை நிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் ராமேசுவரத்தில் கூடுகின்றனர்.

ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

காலை 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமாருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, கோயிலுக்கு உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸார் 1000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகம் முழுவதும்...

இதேபோல தமிழகம் முழுவதும் திருச்சி அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, பல்வேறு ஆற்றங்கரை பகுதிகள், கடற்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
“நீங்கள் இல்லாமல் என்ன செய்யப்போகிறேன்” - தந்தையின் நினைவுகளை பகிர்ந்த மெஸ்ஸி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in