

புதுச்சேரி: புதுச்சேரி பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோலை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போரால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியிலும் மத்திய அரசு உத்தரவின்படி வணிக சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள 750 ஒட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஒட்டல்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது.
அதேபோல் முக்கிய ஒட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி முழுவதும் ஒட்டல்கள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டரை நம்பி இயங்கிய சிறிய டீக்கடைகள், தள்ளு வண்டி கடைகளும் கேஸ் தீர்ந்தவுடன் மூடப்பட்டு வருகிறது. இருப்பினும் சில ஒட்டல்களில் விறகு அடுப்புகள் மூலம் சமையல் செய்கின்றனர்.
அதேநேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழங்குவதில் எந்தவித தடையும் இல்லை என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெட்ரோல் தட்டுப்பாடு என்ற வதந்தியால் வில்லியனூர், அரும்பாத்தபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நகர பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு நள்ளிரவில் இருந்து வாகனங்களுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் திரண்டனர்.
இதனால் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் வாகனங்களோடு மக்கள் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். மேலும் பலர் 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் 10 லிட்டர் 5 லிட்டர் என கேன்களிலும் பாட்டில்களிலும் பெட்ரோலை வாங்கினர். பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக தொடர்ந்து ஏராளமான மக்கள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்து உள்ளனர். இன்றும் காலை முதலே பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுவதால் பரபரப்பு நிலவுகிறது.