

சென்னை: ‘விவசாயம், மீன்வளம், கைத்தறி, சிறு தொழில்கள் போன்ற வாழ்வாதாரத் துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்காமல், அறிவிப்புகளால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியாது. மக்கள் எதிர்பார்ப்பது விளம்பரங்களை அல்ல’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் ஆவணமாக இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் துறை விரிவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தெளிவான செயல்திட்டம் காணப்படவில்லை.
மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசு, புதிய திட்டங்களை அறிவிப்பது மட்டுமே போதாது. அந்த திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வரும்? எந்தக் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடன் சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசின் வருவாயை உயர்த்தும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள், புதிய முதலீடுகள், நிரந்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்ட வாரியான சமச்சீர் வளர்ச்சிக்கான வலுவான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லை.
விவசாயம், மீன்வளம், கைத்தறி, சிறு தொழில்கள் போன்ற வாழ்வாதாரத் துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்காமல், அறிவிப்புகளால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியாது. மக்கள் எதிர்பார்ப்பது விளம்பரங்களை அல்ல. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்பாடுகளையே.
எனவே, இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, அரசு உரிய காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதுடன், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு ஆகிய துறைகளில் தனித்துவமான செயல் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.