

சென்னை: நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கிவருவதாகக் கூறினார்.
ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார். டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:
திருநர் நலன்: மாற்று பாலினத்தவருக்காக திறன் பயிற்சி , சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ.50,000 வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் வழங்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்
நூலகம், யோகா, தியானம் , உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்
அங்கன்வாடி மேம்பாடு: 500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்யும் முயற்சிகள் எடுக்கப்படும். பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள் உறுதி செய்யப்படும்.
> 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
> 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கட்டண உதவி வழங்கப்படும்.
> மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடரும்.
> ஹஜ் பயண மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
> கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு.
> கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.
> 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அண்ணனின் சீர்: பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு
> சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் உட்கட்டமைப்பு மேம்பாடு. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம்.
இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
> பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.
> பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
> 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
> போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
> 2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.