

மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் இரவு முழுவதும் காத்திருந்த பயணிகள் அதிகாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஒசூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, கோழிக்கோடு உள்ளிட்ட பக்கத்து மாநில நகரங்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் 8 நடைமேடைகள் உள்ளன. இரவு 7 மணி தொடங்கி அதிகாலை வரை சென்னை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகள் இயக்கும் இடங்களில் பேருந்துகள் நின்று கொண்டிருக்கும். பயணிகள் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கும். பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களின் போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெளியூர்களிலிருந்து மதுரை வழியாக இயக்கப்படும் பேருந்துகளும் மாட்டுத்தாவணி வந்து பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்வதற்காக குடும்பத்துடன் வந்தவர்கள் பேருந்துகள் இல்லாமல் காத்திருந்தனர். இரவு 9 மணியளவில் பேருந்து நிலையத்துக்கு வந்தவர்களுக்கு இன்று அதிகாலை வரை பேருந்துகள் கிடைக்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளும் வரவில்லை. வந்த ஒரு சில பேருந்துகளிலும் இருக்கைகள் காலியாக இல்லை.
பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்து பேருந்துகள் கிடைக்காத ஆத்திரத்தில் பயணிகள் திடீரென பேருந்து நிலையத்துக்கு வெளியே வந்து மேலூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்து ஏற்பாடுகள் செய்வது தருவதாக உறுதியளித்தனர். இதையேற்று பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எப்போது வந்தாலும் பேருந்து கிடைக்கும். பண்டிகை நாட்களில், சிறப்பு தினங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக நகரப் பேருந்துகள் தொலைதூர பேருந்துகளாக இயக்கப்பட்டு கூட்ட நெரிசல் சமாளிக்கப்படும்.
மாட்டுத்தாவணியிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளை வைகாசி விசாகத்துக்காக திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஏற்படும் பேருந்துகள் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னேற்பாடுகள் செய்யாமல் பேருந்துகளை வைகாசி விசாகத்துக்காக அதிகாரிகள் திருப்பி விட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றனர்.