

மதுரை மாவட்டத்தில் ஆய்வுக்குச் செல்லும் தவெக எம்எல்ஏ-க்கள், ஆய்வு நிகழ்வை 'ரீல்ஸ்' எடுத்து சமூக வலைதள பக்கங்களில் அப்படியே பதிவு செய்வதால், அவர்களுடன் ஆய்வுக்குச் செல்ல அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. அதையடுத்து, தற்போது தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளுடன் மாநகர குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆய்வுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு செல்லும் எம்.எல்.ஏ.க்கள், ‘முதல்வன்’ சினிமா பாணியில் கேமரா சகிதமாக அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் கட்சியினரையும் அழைத்துச் செல்கின்றனர்.
தொகுதியில், கடந்த திமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரிசெய்வதாகவும், 'பொதுமக்கள், கட்சியினர் கூறும் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும். உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதையும் அப்படியே வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பரப்புகின்றனர். ஆய்வு நிகழ்வுகளை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு. தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலங்களில் எம்.எஸ்.ஏ.க்கள் ஆய்வுக்கு அதிகாரிகளை அழைத்துச் செல்லும்போது, தங்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளையும் அழைத்துச் செல்வர். அவர்கள் எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் மட்டுமே சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும்.
ஆனால், தற்போது தங்களது கட்சியினரையும் உடன் அழைத்துச் செல்லும் எம்.எல்.ஏ.க்கள், பொதுவெளியில் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதனால், அரசுத் துறை அதிகாரிகள் நெருக்கடிக்கு ஆளாவதால், இவர்களுடன் ஆய்வுக்குச் செல்ல தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆய்வு நிகழ்வுகளை அப்படியே ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், சில நேரங்களில் அதுவே தவெக அரசுக்கு நெருக்கடியையும், எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய ஆதாரமாகவும் மாறிவிடும்.
எனவே தான், தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையை உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளின் ஆய்வு நிகழ்வுகளை ஒவ்வொரு அரசுத் துறை அதிகாரிகள் பார்வைக்கும். ஒப்புதலுக்கும் அனுப்பிய பிறகே. சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படுகிறது.
ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் தவெக எம்எல்ஏ.க்கள் பின்பற்றுவதில்லை. அதை அவர்களிடம் எடுத்துச் சொல்லவும் முடியாமல். சொன்னால் தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தினாலும், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே, இது கடைசியில் தவெக அரசுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என்றனர்.