பாஜகவில் கட்சி பதவிகளை துறந்து அண்ணாமலை இயக்கத்தில் இணையும் நிர்வாகிகள்

அண்ணாமலை | கோப்புப் படம்

அண்ணாமலை | கோப்புப் படம்

Updated on
2 min read

மதுரை: பாஜகவில் பதவியில் இருக்கும் ஏராளமான நிர்வாகிகள் கட்சிப் பதவியை ராஜினமா செய்து விட்டு, அண்ணாமலை தொடங்கும் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கம் தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார். இதற்காக வி த லீடர் (www.wetheleader.org) என்ற இணைய தளம் வழியாக இயக்கத்தில் தன்னார்வலர்களாக இணையவும், கோவையில் ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் சென்டர் பார் எத்திஸ் அன்ட் பாலிடிக்ஸ் என்ற அமைப்பின் மூலம் தலைவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாஜகவில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் இணையதளம் வழியாக அவரது இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் அண்ணாமலையின் இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அண்ணாமலை, ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020ல் பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவராக மத்திய அமைச்சர் எல்.முருகன் இருந்தார். கட்சியில் சேர்ந்ததும் அண்ணாமலை மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2021ல் அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2025 வரை தலைவராக இருந்தார்.

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த போது பல்வேறு கட்சிகளில் இருந்தவர்கள், எந்தக் கட்சியிலும் இல்லாதவர்கள் பாஜகவில் இணைந்து தனியாக வார் ரூம் தொடங்கி அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட தொடங்கினர். பாஜக கூட்டங்கள், போராட்டங்களுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.

திமுக அமைச்சர்களின் சொத்து சேர்ப்பு தொடர்பாக திமுக பைல்ஸ்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தினர். இந்த யாத்திரையில் மக்கள் திரண்டு அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 12 சதவீத வாக்குகளை பெற்றது. தேர்தலின் போது அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க நினைத்த போது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டார்.

பாஜக மேலிடத்தின் இந்த முடிவை அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சீட் வழங்கப்படவில்லை. மேலிடம் கேட்டுக்கொண்டதால் அண்ணாமலை தேர்தலில் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஒதுங்கியே இருந்தனர். தேர்தலில் பாஜக படு தோல்வியை சந்தித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் 12 சதவீதமாக இருந்த வாக்குவங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 சதவீதமாக சுருங்கியது. இதையடுத்து அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படும் என நினைத்த நிலையில், அவர் கட்சியை விட்டு விலகியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் புதிய இயக்கம் தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் புதிய இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.

மதுரையில் பாஜகவின் 3 மாவட்டங்களில் தற்போது பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி அண்ணாமலை இயக்கத்தில் 7 லட்சம் பேர் இணைந்திருந்தனர். சராசரியாக நிமிடத்துக்கு 34 பேர் வீதம் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இது குறித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறுகையில், ‘இனி தமிழக அரசியல் விஜய், உதயநிதி, அண்ணாமலை என்று தான் இருக்கும். பாஜக மற்றும் பிற கட்சிகளில் இருப்பவர்களும், எந்தக் கட்சியிலும் இல்லாத அண்ணாமலை ஆதரவாளர்களும் அவரது இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என்றனர்.

பாஜகவினர் கூறுகையில், அண்ணாமலை வருகைக்கு பிறகு, அவரைப் பார்த்து பாஜகவில் சேர்ந்தவர்கள் மட்டுமே அவர் பின்னால் செல்கின்றனர். காலம் காலமாக பாஜகவில் இருப்பவர்களுக்கு கட்சி தான் முக்கியம். பாஜக எப்போதும் தலைவர்களை நம்பிருக்கும் கட்சியல்ல. எனவே கட்சிக்காக இருப்பவர்கள் பாஜகவில் தான் இருப்பார்கள் என்றனர்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை | கோப்புப் படம்</p></div>
தவெக - காங்கிரஸ் கூட்டணியின் சூத்திரதாரி: யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in