

சென்னை: வளைகுடா நாடுகளில் போர் பரவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர். போரால் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வளைகுடா நாடுகளின் அரசுகளை இந்தியா கேட்டுக்கொள்ள வேண்டும். போரை கைவிட்டு அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காண சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வர வேண்டும். இந்தியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான மற்றும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்தரநாத்: ஈரானுடைய இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் எதிராக, அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கியநாடுகள் அவையின் சட்ட நெறிமுறைகளுக்கும் மேற்கு ஆசியாவின் அமைதிக்கும் எதிரானதாகும். இத்தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்
டிரேட் யூனியன் சென்டர் ஆஃப் இந்தியா பொதுச் செயலர் ஆர்.மனசையா: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஈரான் தலைவரை கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் அமைப்பு மூலமாக உலக அமைதிக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.