புதிய கட்சியைத் தொடங்கிய பண்ருட்டியார் - பின்னணியில் தவெக?

புதிய கட்சியைத் தொடங்கிய பண்ருட்டியார் - பின்னணியில் தவெக?
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகராகவும், அவருக்கு பக்கபலமாகவும் இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: இன்றைய அரசியல் சூழல் அடையாள அரசியலையும், கொள்கை அரசியலையும் சார்ந்து சுழல்கிறது. பிறப்பின் அடிப்படையில் எவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது.

திறமையுள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' உருவாக்குவதே இந்த இயக்கத்தின் பிரதான நோக்கம். இந்த இயக்கம் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தொடங்கப்படவில்லை. இது ஒரு நீண்ட நெடிய அரசியல் பயணம். தேர்தல் என்பது இந்தப் பயணத்தில் வரும் ஒரு சடங்கு போன்றது. எங்களது கொள்கைகளுக்கு உடன்படுபவர்களைத் தேர்தலில் ஆதரிப்போம்.

ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட ஒரு நபருக்காக அரசியலில் வாழ்நாளை வீணாக்க முடியாது. அரசியல் என்பது தனி மனிதருக்கானது அல்ல, அது மக்களுக்கானது. நாம் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பயணித்தோம் என்பதற்காக நம் வாழ்நாளை அங்கேயே முடக்கிவிட முடியாது. ஓபிஎஸ்க்காக உயிரையா துறக்க முடியும்? நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. வரும் தேர்தலில் போட்டி என்பது திமுகவிற்கும் விஜய்க்கும் இடையில்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட தனது கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தாரக மந்திரத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் முறையான தொடக்க விழா மற்றும் விரிவான கொள்கை விளக்கக் கூட்டம், வரும் 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசியலின் 'பீஷ்மர்' என்று அழைக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற ஆளுமைகளுடன் பணியாற்றியவர். 1967 மற்றும் 71-ல் திமுக எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்தார். 1977-ல் அதிமுகவில் இணைந்து எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்தார். பின்னர் பாமக, மக்கள் நலவுரிமைக் கழகம், தேமுதிக எனப் பயணித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவையும், பின்னர் ஓபிஎஸ்ஸையும் ஆதரித்து வந்தார்.

இதன் பின்னணி குறித்து பேசுவோர், "ஓபிஎஸ் அணியில் இருந்த பலரும் விஜய் பக்கம் செல்லலாம் என ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்திய போதிலும், டெல்லி பாஜக தலைமையின் மீதான அச்சத்தால் அவர் எந்த முடிவும் எடுக்காமல் தயக்கம் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதற்கு பின்னால், தவெக இருக்கிறது. விரைவில் விஜய் கட்சிக்கு இவர் ஆதரவு அளிக்கக்கூடும்" என்றனர்.

புதிய கட்சியைத் தொடங்கிய பண்ருட்டியார் - பின்னணியில் தவெக?
திமுக உடன் கைகோத்த தேமுதிக - ‘பழம் நழுவி பாலில்’ விழுந்தது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in