

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிரேமலதா.
எந்தப் பக்கம் செல்லப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக நேற்று இணைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சந்தித்த பிரேமலதா இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
திமுக, அதிமுக என்று இரு கூட்டணிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எல்லாகட்சிகளும் எங்களுக்கு தோழமைதான், கூட்டணி குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறிய பிரேமலதா, கடந்த வாரம் கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பிரேமலதாவும் அருகருகே அமர்ந்து பேசினர். இதனால், அதிமுக கூட்டணிக்கு பிரேமலதா செல்வது உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக திமுக-வுடன் கைகோத்திருக்கிறார் பிரேமலதா. அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, "முதல்முறையாக திமுக-வுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.
முதல்வரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். இந்தக் கூட்டணி 2016-ல் அமைந்திருக்க வேண்டியது. பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி அப்போது கூறியிருந்தார், அது இப்போது நிகழ்ந்திருக்கிறது" என்றார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. தேமுதிவை தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் பிரேமலதாவையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழகத்தின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டதாகவும் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் வரை கொடுக்கவும் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் கொடுத்து வரும் காங்கிரசுக்கு திமுக ‘செக்’ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணி குறித்து பேசுவோர், "திமுகவிடம் 15 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள், தேர்தல் செலவு எனத் தேமுதிக பெரிய டிமாண்ட் வைத்தது. இதற்கு திமுக சம்மதிக்கவில்லை. இதே கோரிக்கையுடன் அதிமுகவை அணுகியபோது, அங்கும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையில், மத்திய அமைச்சர் பதவி உறுதி அளிக்கப்பட்டதால் டிடிவி தினகரன் தேஜ கூட்டணியில் இணைந்தார். பிரேமலதாவும் அதேபோன்றதொரு முக்கியப் பொறுப்பை எதிர்பார்த்தார். இறுதியில் பாஜக இரட்டை இலக்கத் தொகுதிகள், ராஜ்யசபா சீட், தேர்தல் செலவுகளை ஏற்பதாகக் கூறியது.
இருப்பினும், சரத்குமார், விஜயதரணி ஆகியோரின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய நலம் விரும்பிகள், "பாஜகவை நம்பிச் சென்றால் இறுதியில் ஏமாற்றம் மிஞ்சலாம்" என்றனர். அதிமுகவும் ராஜ்யசபா சீட்தருவதாகக் கூறி ஏமாற்றிய கசப்பான அனுபவம் இருந்ததால், பிரேமலதா யோசிக்கத் தொடங்கினார்.
மறுபுறம், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியால் திமுக தலைமை அதிருப்தியில் இருந்தது. கே.சி. வேணுகோபால் சென்னையில் இருக்கும்போதே காங்கிரஸுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஸ்டாலின் விரும்பினார். உடனடியாக தேமுதிகவை இழுக்க வேலுவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து கல்லூரி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது, 6 முதல் 8 தொகுதிகள், உறுதியான ராஜ்யசபா சீட்" என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 12 தொகுதிகள் எதிர்பார்த்தார் பிரேமலதா.
‘எவ்வளவு தொகுதிகள் குறைகிறதோ அதற்குப்பதிலாக ‘கவனிப்புகள்' இருக்கும் என திமுக உறுதியளித்ததாக தெரிகிறது. இதற்கு பிரேமலதா சம்மதம் தெரிவித்தாலும், "நாள் நன்றாக இருக்க வேண்டும்" என்பதற்காக குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று அறிவிப்பை வெளியிட விரும்பினார். இதனால் ஒருநாள் தாமதமாக நேற்று அறிவிப்பு வெளியானது. இல்லையென்றால் வேணுகோபால் இருக்கும்போதே அதிர்ச்சி கொடுத்திருப்பார்கள்" என்றனர்.