மேகேதாட்டு விவகாரத்தில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை அதிமுக ஏற்கவில்லை: பழனிசாமி விளக்கம்

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்த பழனிசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ.க்கள்.

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்த பழனிசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ.க்கள்.

Updated on
1 min read

சென்னை: மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தில், இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி முதல்வரால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பேரவை விதிகளின்படி, உறுப்பினர்களுக்கு அனுப்பிய வரைவில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அரசின் சார்பான திருத்தங்கள் முறையாக பேரவைக்கு தெரிவிக்கப்பட்டு, வரைவில் உள்ள தீர்மானத்துக்கு பதிலாக, திருத்தப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று முதல்வர் முன்மொழிய வேண்டும்.

இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் அளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெறாமல், திருத்தம் செய்வது குறித்து பேரவைக்கு அறிவிக்காமல் தீர்மானத்தை முதல்வர் திருத்தி மொழிந்தது பேரவையின் உரிமையை மீறிய செயலாகும்.

19-ம் தேதி பேரவை விதிப்படி முன்மொழியப்படாத, இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒரு நிலையான தீர்ப்பை வழங்கிவிட்டது.

அப்படி இருக்க, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று சொல்வது ஏன்? இதையொட்டி அரசினர் தனித் தீர்மானத்தில் இடைச்செருகலாக திருத்தம் செய்ததைத்தான், பேரவையில் உரிமைப் பிரச்சினையாகக் கொண்டு வந்தோம்.

ஆனால், பேரவைத் தலைவர் எங்களைப் பேச அனுமதிக்கவில்லை. அதனால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்த பழனிசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ.க்கள்.</p></div>
தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in