பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்த வழக்கறிஞர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

சிபிசிஐடி, சிறை அதிகாரிகள், மருத்துவர்களிடம் மாவட்ட நீதிபதி விசாரணை
வழக்கறிஞர் அன்வர்தீன்

வழக்கறிஞர் அன்வர்தீன்

Updated on
2 min read

மதுரை: பழநி கோயில் நில பத்திரப் பதிவு மோசடி வழக்கில் கைது செய்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள், சிபிசிஐடி போலீஸார், சிறைத் துறை அதிகாரிகளிடம் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார்.

வழக்கறிஞர் அன்வர்தீன் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று மதுரை அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் உயிரிழப்பு குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சிபிசிஐடி போலீஸார் விசாரணை: பழநி அடிவாரப் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி மற்றும் இவர்களுக்கு உதவிய வழக்கறிஞர் அன்வர்தீன் (65), இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கெனவே உடல்நலக் குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3 நாட்கள் போலீஸ் காவல்: இந்நிலையில், முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் காவல் 7-ம் தேதி மாலையுடன் முடிவடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனைக்கு பிறகு, அன்வர்தீன் உள்ளிட்ட 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்று இரவு 10.30 மணி அளவில் அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறைத் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அன்வர்தீனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சிறைத் துறை நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு நேற்று காலை மருத்துவமனைக்கு வந்து, அன்வர்தீன் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர்கள், சிபிசிஐடி போலீஸார், சிறைத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, மதுரை, திண்டுக்கல், விருதுநகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் சரவணன் கூறும்போது, ‘‘கைதிகள் மரணமடைந்தால், அதற்கான விதிமுறைகளின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். அதன்படி, மதுரையைச் சேர்ந்த ஒரு மருத்துவர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் அன்வர்தீன் உடலை பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதன் அறிக்கை வந்த பிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்’’ என்று கூறினார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்: இதுதொடர்பாக சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அன்வர்தீனுக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்த நிலையில், பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுபற்றி எங்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் முறையான பரிசோதனைக்குப் பிறகு, மாலை 6 மணிக்கு சிறைக்கு அழைத்து வரப்பட்டார். திடீரென இரவு 10.30 மணி அளவில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்’’ என்று கூறினர்.

உயர்நிலை விசாரணை தேவை: இந்த நிலையில், அன்வர்தீன் உயிரிழப்பு தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அன்வர்தீன் கடந்த 8 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிரமப்பட்டு வந்தார். அவர், மதுரை சிறையில் இருந்த 11 நாட்களில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு சென்று வந்த பிறகே அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து சிபிசிஐடி போலீஸார் எங்களிடம் தெளிவு படுத்தவில்லை. அதுபற்றி எங்களிடம் எந்த விவரமும் தெரிவிக்க வில்லை. இந்த நிலையில், அவரது இறப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

<div class="paragraphs"><p>வழக்கறிஞர் அன்வர்தீன்</p></div>
தொகுதி மறுவரையறை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in