தொகுதி மறுவரையறை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
Updated on
3 min read

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையைநிரந்தரமாக பாதுகாக்க, சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன.

நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க தமிழக அரசு சார்பில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.

19 பேர் மட்டுமே பங்கேற்பு: இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 19 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்க, தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவாக, முதல்வர் விஜய் பேசினார்.

‘‘தொகுதி மறுவரையறை செய்வதன்மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் பாதிக்கப்படும் என்பதால், எம்.பி.க்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கைவிடவும், தற்போதைய நிலையே தொடரவும் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தவும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் கூறியதாவது:

கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்): தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 ஆகவே தொடர வேண்டும். ஏற்கெனவே உள்ள எம்.பி.க்களுக்கே நாடாளுமன்றத்தில் பேச போதுமான நேரம் கிடைக்காத சூழலில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை. கடந்த முறை போலவே இந்த முறையும் மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.

பிரவீன் சக்கரவர்த்தி (காங்கிரஸ்): தொகுதி மறுவரையறை என்பது அடுத்த 75 ஆண்டுகளுக்கான பிரச்சினையாகும். இத்தகைய முக்கியமான விவகாரம் குறித்து தற்போது ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த நேரத்தில், காவிரி பிரச்சினை குறித்து பேசவில்லை என்று எதிர் தரப்பினர் விமர்சிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருமாவளவன் (விசிக): தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடரவேண்டும். அமெரிக்காவில் 13 மாநிலங்களாக இருந்தபோது இருந்த எண்ணிக்கைதான் 50 மாநிலங்களாக மாறிய பிறகும் நீடிக்கிறது. அதுதான் இந்தியாவுக்கும் பொருந்தும். திமுக, அதிமுக இந்த கூட்டத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்களும் நமது நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள் என நம்புகிறேன்.

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆசை,சட்ட வடிவம் பெறுகிறது. தொகுதி மறுவரையறை என்பது ஏமாற்று வேலை. ‘50 சதவீதம் தருவோம்’ என்று மத்திய அரசு கூறுவதை நம்பி யாரும் ஏமாந்துவிடக் கூடாது. வடகிழக்கு மாநிலங்கள் கையறு நிலையில் இருப்பதுபோன்ற சூழல் தென்னிந்தியாவிலும் உருவாகும். அதனால், 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம். அதை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

துரை வைகோ (மதிமுக): தொகுதிமறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், அது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற பாஜகவின் ஆசை வார்த்தைகளை நம்பி, தமிழகத்தில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் உள்ளன. மாறாக அதை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

அமைச்சர் நிர்மல் குமார்: தொகுதி மறுவரையறை என்பதே தமிழகத்துக்கு தேவையில்லை. இதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இன்னும் 25 ஆண்டுகளுக்கு இதே எண்ணிக்கை நீடித்தாலும் தவறு இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம புறக்கணிப்பு: தமிழகத்தில் மாநிலங்களவை 18, மக்களவை 39 என மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் திமுக 30, அதிமுக 4, காங்கிரஸ் 12, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக தலா 2, பாமக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்),

மதிமுக, மக்கள் நீதி மய்யம் தலா ஒரு எம்.பி. உள்ளனர். இதில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம ஆகிய கட்சிகள் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன. காங்கிரஸ் தரப்பில் எம்.பி. சுதா மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அந்த வகையில் மொத்தம் உள்ள 57 எம்பி.க்களில் 38 பேர் (புறக்கணிப்பு - 37, ஆப்சென்ட் - 1) கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தவெகவுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு, கலைவாணர் அரங்கில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், காரில் இருந்து இறங்கி, வாலாஜா சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்தார்.

தொகுதி மறுவரையறை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in