

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரும் மனு மீது சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக்கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மற்றும் அவரது மேலாளரான சரவணன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மீண்டும் மூவரையும் ஒன்றாக 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார்.
இந்த மனு மீது இன்று (நவ.25) உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்து மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அன்பில் மகேஸூக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று நடந்தது.
அப்போது வாதிட்ட வழக்கறிஞர், கைதுக்கு முன்பாகவும் பின்பாகவும் அன்பில் மகேஸிடம் 25 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்திவிட்டதாகவும் அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ள இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களையும் சேர்க்க வேண்டும் என்றும் வாதிட்டனர். அதையடுத்து காவல்துறை தரப்பு வாதத்துக்காக நவ.27-க்கு வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.