

நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்? என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்துவிட்டேன். அந்த உண்மையைச் சொல்லுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் நேற்று பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் ஓபிஎஸ். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஜெயலலிதா இறந்த பிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை. என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள். பிறகு பல்வேறு வகையிலும் என்னை அவமானப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள்.
ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியிலும் இருந்தாலும் ஆட்சி முடிந்ததும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்வது எனது மரபு. அந்த அடிப்படையிலேயே திமுக ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். ஆனால், நான் திமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பது போல கருத்து பரவிவிட்டது.
டிடிவி.தினகரன் என்னை பசுந்தோல் போர்த்திய புலி என்று கூறியுள்ளார். அரசியல் நாகரிகம், பண்பாடு கருதி நான் கடின வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. நான் நினைத்தால் அவரை விட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக் கூற முடியும். நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்? என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்துவிட்டேன். அந்த உண்மையைச் சொல்லுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.
திமுக பலமான கூட்டணி அமைத்து உள்ளது. ஆகவே, அவர்களை வெல்ல அதிமுக-வினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் போடி தொகுதியில் போட்டியிடுகிறேனா என்று ஆண்டவனுக்குத் தான் தெரியும். தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் அதிமுக-வில் வகுத்த சட்ட விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வரை அதிமுக-வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.