

மதுரை: சாலை அமைக்க ஒதுக்கும் நிதியில் ரூ.100-ல் ரூ.40-ஐ மட்டும் செலவிடுகின்றனர். 60 சதவீத பணம் குறிப்பிட்ட சிலரின் பாக்கெட்களுக்கு சென்றால் எப்படி தரமான சாலையை அமைக்க முடியும் என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் பழைய தார்சாலைகளை முறையாகத் தோண்டி அகற்றாமலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், பழைய சாலையின் அகலத்தைக் குறைத்து புதிய சாலை அமைத்துள்ளனர்.
இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்து சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பள்ளமாகி மழைநீர் புகுந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதில் தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தற்போது சாலைகள் சரியாக அமைப்பதில்லை. ஏற்கெனவே போடப்பட்ட சாலைக்குமேல் தாரை ஊற்றி தடவி விட்டு சாலை போட்டதாக கணக்கு காட்டுகின்றனர். ஏற்கெனவே போடப்பட்ட சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது விதி. அதை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதுபோன்ற சாலைகள் அமைத்தால் எதிர்காலத்தில் மதுரையைக் கண்டறிய முடியாது.
பிரதமர், முதல்வர் என முக்கியப் பிரமுகர்கள் வந்தால் இரவோடு, இரவாக சாலைகளை அமைக்கின்றனர். புதிதாக சாலை அமைக்க ஒவ்வொரு வாரமும் பிரதமரும், முதல்வரும் வரவா முடியும்?
சாலை அமைக்க ஒதுக்கும் நிதியில் 100 ரூபாயில் 40 ரூபாயை மட்டுமே செலவிடுகின்றனர். 60 ரூபாய் யாருக்கு, எதுக்கு, எப்படி, எப்போது போகிறது என்பது தெரியவில்லை. சாலை அமைக்க ஒதுக்கும் பணத்தின் பெரும் பகுதி குறிப்பிட்ட சிலரின் பாக்கெட்களுக்கு போனால் எப்படி தரமான சாலை அமைப்பது?
தரமாக சாலை அமைத்தால் 4 ஆண்டுகள் வரை புதிய சாலை போட வேண்டியது வராது. ஆன்லைன், திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகளிலும் முறைகேடு நடக்கிறது. எனவே, இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி சாலை ஒப்பந்ததாரர், மாநகராட்சி தலைமைப் பொறியாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுடன் நவ.7-ல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.