

சென்னை: ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறையை தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை விரைவாக மீட்கும் வாய்ப்பு அதிகமாகும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் எவ்வளவு எளிதாகி இருக்கிறதோ, அதே அளவுக்கு இணையவழி நிதி மோசடிகளும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன.
சற்று அஜாக்கிரதையாக இருந்தாலும், உழைத்துச் சேர்த்த பணம் நிமிடங்களில் கொள்ளையடிக்கப்படும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக பகுதி நேர வேலை மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, போலிக்கடன் செயலி, யுபிஐ மற்றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்வேறு வடிவங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைன் நிதி மோசடி புகார்களை விரைவாக பதிவு செய்து, இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த, தமிழக காவல்துறை, ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 1930 என்ற உதவி எண்ணுடன் இந்த புதிய வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும்.
ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்புடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’-ஆகபதிவு செய்யப்படும்.
பின்னர், புகார் அளித்தவருக்கு, ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். புதிய சட்ட விதிகளின்படி, புகார்தாரர் தனது புகாரை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட சைபர் குற்ற காவல் நிலையத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும். புகார்தாரர் நேரில் ஆஜராகி உறுதிப்படுத்தியதும், அந்த ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’ சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, வழக்கமான எஃப்ஐஆர்-ஆக பதியப்படும்.
பிஎன்எஸ்எஸ், 2023 பிரிவு 173-ன் கீழ் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. இது அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இதனால் சட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி உடனடியாகத் தொடங்க முடிகிறது. மோசடி நடந்த முதல் சில மணிநேரங்கள் மிக முக்கியமானவை. இம்முறையினால் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்கை விரைவாக முடக்க முடியும்.
டிஜிட்டல் ஆதாரங்கள் உடனுக்குடன் பாதுகாக்கப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், ஒரே தகவலை பலமுறை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, இணையவழி நிதி மோசடியால் பாதிக்கப்படுபவர்கள், எவ்வித தாமதமும் இன்றி தேசிய இணைய குற்ற உதவி எண்ணான 1930-ஐ தொடர்புகொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.