

கோப்புப்படம்
சென்னை: சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.17,930 கோடி மதிப்பில் 2022 மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டம் 10 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. 263 கி.மீ. தூரம் கொண்ட இந்த விரைவு சாலையில், கர்நாடக எல்லைக்கு உட்பட்ட 71 கி.மீ. நீளமுள்ள ஹோஸ்கோட்டே - பெத்தமங்களா வரையிலான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து, போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதிகளிலும், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.
ஆனாலும், பெரும்புதூர் - அரக்கோணம் - காஞ்சிபுரம் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே மேம்பால அனுமதி, ஒப்பந்ததாரர்களின் நிதி நெருக்கடி காரணமாக பணிகள் சுணக்கமடைந்தன. இதுவரை 230 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைக்கான மொத்த திட்டச் செலவு ரூ.17,700 கோடி. இதில் 94 கி.மீ. நீளம் கொண்ட தமிழகப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.7,650 கோடி. நீதிமன்ற வழக்கு காரணமாக, 25 கி.மீ. தூரப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், அக்டோபருக்குள் பணிகள் நிறைவடையும்.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாகச் செல்ல தற்போது 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்றனர்.