முதல்வர் விஜய்யை 3 நாட்களாக அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியவில்லை: திமுக குற்றச்சாட்டு

அண்ணா அறிவாலயம் | கோப்புப் படம்
அண்ணா அறிவாலயம் | கோப்புப் படம்
Updated on: 
1 min read

சென்னை: “ஒரு பெண் ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ தொல்லை கொடுத்துள்ளதாக வந்துள்ள செய்திக்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்க வேண்டும். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இந்த 6 மாத கால தவெக ஆட்சி உள்ளது. மூன்று நாட்களாக தலைமைச் செயலாளர், டிஜிபியால் முதல்வர் விஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல்” என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “6 மாதத்தில் சட்டம் ஒழுங்கை தூக்கி நிறுத்தி விடுவோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். இந்த 6 மாத கால ஆட்சிக்கு தீபாவளி பண்டிகை தான் பெரிய சாட்சி. இந்தப் பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட, பட்டாக்கத்தி சத்தம் தான் அதிகம் கேட்டுள்ளது. தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தில் 17 கொலைகள் நடந்துள்ளன. ‘பண்டிகை நாட்கள் என்றால் அப்படி, இப்படித்தான் இருக்கும்,’ என அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார். பட்டிமன்றத்தில் பேசுவது போல அவர் பேசுகிறார்.

கிரிக்கெட் ஸ்கோர் எகிறுவதுபோல தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தீபாவளிப் பண்டிகை நாளில் முதல்வர் விஜய் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிட்டார். பண்டிகை நாளில் எந்த அதிகாரியாலும் முதல்வர் விஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்திரிகைகளில் கொலை செய்திகள் வருகிறது. முதல்வர் விஜய் பேப்பர் படிக்கிறாரா? மூன்று நாட்களாக முதல்வர் விஜய் எங்கே இருந்தார்? முன்று நாட்களாக தலைமைச் செயலாளர், டிஜிபியால் முதல்வர் விஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல். முதல்வர் பணி என்பது 10 முதல் 5 மணி வரையிலான பணி இல்லை. முழு நாளும் முதல்வர் செயல்பட வேண்டும்.

வீட்டில் தண்ணீர் கேட்டு வந்த சாமானியரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். இதுதான் தவெக ஆட்சியின் நிலையா? தமிழகத்தில் இப்போது காட்டாட்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் முதல்வர் விஜய் காணாமல் போனால், தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? தமிழகத்தில் குற்றவாளிகளை தவெக அரசு காப்பாற்றுகிறதா?

ஒரு பெண் ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ தொல்லை கொடுத்துள்ளதாக வந்துள்ள செய்திக்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்க வேண்டும். துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இந்த 6 மாத கால தவெக ஆட்சி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிக்கு தொல்லை கொடுத்த தவெக எம்எல்ஏவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை. மாலை 5 மணிக்கு மேல் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. தவெக ஆட்சியில் பெண் ஆட்சியருக்கு கூட பாதுகாப்பு இல்லை” என்றார்.

அண்ணா அறிவாலயம் | கோப்புப் படம்
“கள்ளநோட்டுகளைப் போல கள்ள புத்தகங்கள் பறிமுதல்” - அமைச்சர் ராஜ்மோகன் வேதனை

X