

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுகாதாரப் பணியாளர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக, திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவர் மேடையில் இருக்கும் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இன்றைய முதல்வர் விஜய் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று செவிலியர்கள் கோஷமிட்டனர்.
சங்கத்தின் தலைவர் சுந்தரி பேசுகையில், “இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாதம் ரூ.21,000 ஊதியத்தில் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும். கடந்த 2023 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.45,000 ஊதியம் வழங்க வேண்டும்.
இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
போராட்டத்தில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது, “சுகாதார பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம உரிமை, ஊதியம் கிடைப்பதில்லை. இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு மாதம் ரூ.21,000 தான் வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் உயர்த்தி கொடுக்கப்படுகிறது. அதனால், செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும்” என்றார்.
திமுக ஆட்சியிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என்று மனோ தங்கராஜிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நான் கட்சி சார்பில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. உரிமைக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன் என்று மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் போராட்டத்தின் ஒருதரப்பினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடித்தது. முன்னதாக, ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜூம் கைது செய்யப்பட்டார்.