

சென்னை: நில மோசடி வழக்கில் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற மறுத்த புகார்தாரர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான ஆவணங்களுடன் கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள 1,800 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணங்களைத் தயாரித்ததாகஎஸ்.சூர்யா என்பவர் அளித்த புகாரின் பேரில், வடபழனியைச் சேர்ந்த பால்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பால்துரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பால்துரைக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறக் கூறி ஆய்வாளர் சூர்யாவை மிரட்டியதாகவும், அதற்கு அவர் சம்மதிக்காததால் பால்துரையின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சூர்யா மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.ரமேஷ், உயர் நீதிமன்ற உத்தரவில் உடன்பாடு இல்லை என்றால் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர, புகார்தாரரை மிரட்டுவதும் பொய் வழக்குப்பதிவு செய்வதும் சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கும் விடப்படும் சவாலாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இது போன்ற நடவடிக்கைகள் நீதி நிர்வாகத்தின் அடிவேரையே ஆட்டும் செயல் எனக் கூறிய நீதிபதி, சூர்யா மீதான வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.