பழநி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு ‘கறி விருந்து’

பழநி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு ‘கறி விருந்து’
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கோம்பைபட்டியில் பெரியதுரை மற்றும் கருப்பணசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 300 ஆடுகளை சமைத்து இன்று (செவ்வாய்கிழமை) 10,000 பேருக்கு ‘கறி விருந்து’ நடைபெற்று வருகிறது.

பழநி அருகேயுள்ள கோம்பைபட்டியில் பெரியதுரை, கருப்பணசுவாமி, செல்வ விநாயகர், தன்னாசியப்பன், பொலக்கருப்பு கோயில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று (மே 4) தொடங்கியது.

நேற்று மாலை 6 மணிக்கு தீர்த்தக் கலசம், குதிரை மற்றும் கருப்பணசுவாமி சிலை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (மே 5) கருப்பணசுவாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ஆடு, அரிசி, பால் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தினர். மொத்தம் 300 ஆடுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பெற்றன. பின்னர் இவற்றைக் கொண்டு உணவு சமைக்கும் பணி கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு, சமையல் செய்யும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு முதல் மெகா 'கறி விருந்து' தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். மொத்தம் 10,000 பக்தர்களுக்கு விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான, ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

பழநி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு ‘கறி விருந்து’
தவெகவை ஆதரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; பொறுத்திருந்து பார்ப்போம்: திருமாவளவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in