

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), ஜானகிராமன் (நாம் தமிழர்), பி.சுகந்தி (சிபிஎம்) ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா ( திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா ( நாதக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிடவும், பரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.