ராமசாமி படையாச்சியர் 109-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம்

ராமசாமி படையாச்சியர் 109-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம்
Updated on
1 min read

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் புகழ் வணக்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ராமசாமி படையாட்சி பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என ராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது திமுக அரசு. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய ராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைப் போராட்ட வீரரும், சமூகத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த தினம் இன்று.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரை நூற்றாண்டுகால பொதுவாழ்க்கையில் சமத்துவம், சமூகநீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அரும்பெரும் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவினர் மரியாதை:

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் 109-வது பிறந்த நாளான இன்று காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அவரது திரு உருவச் சிலைக்கு, அதிமுக சார்பில், அவைத்தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ராமசாமி படையாச்சியர் 109-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம்
திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in